தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொழில் வாய்ப்புகள் இல்லாத இப்பகுதியில், நவீன தொழில்களை கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். கடந்த 2018-ஆம் ஆண்டு, தமிழக அரசு தர்மபுரியில் சிப்காட் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை மையமாகக் கொண்டு ஒரு தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

திட்டத்துக்கான ஆரம்ப நடவடிக்கையாக தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி தாலுகாக்களில் 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலம் அடையாளம் காணப்பட்டது. அதகபாடி, அதியமான்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள் இதில் அடங்கும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், திட்டம் மெதுவாகவே நகர்ந்து வருகிறது.
தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகன உற்பத்தி, விநியோக பூங்கா, நவீன தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு யூனிட்கள் இங்கு அமையவுள்ளன. ஓசூர், பர்கூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே தொழிற்சாலைகள் இருப்பதால், தர்மபுரியிலும் அதே போன்று தொழில் வளம் உருவாகும் என நம்பப்படுகிறது. இது மாவட்டத்தின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும்.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் தர்மபுரி மக்களுக்கு, சிப்காட் திட்டம் ஒரு புதிய திசையை வழங்கும். பருவமழைத் தவறும்நிலையில் விவசாய வருவாய் பாதிக்கப்படும் சூழ்நிலையில், இதுபோன்ற தொழில்திட்டம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். வேலைவாய்ப்பு உருவாகும் போது வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும். சிப்காட் செயல்பட்டால், தர்மபுரி மாவட்டமே தொழில் வளர்ச்சிக்குத் தயாராகும்.