சென்னையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பேட்டியில் தமிழ்நாடு தொழில்துறையில் பின்தங்கியுள்ளதாக கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்தக் கருத்தை ஆதாரமாக கொண்டு திமுக ஆட்சியை விமர்சித்ததை தொடர்ந்து, பிடிஆர் நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார். தொழில்துறையில் ஏற்பட்ட சரிவுக்கு காரணம் அதிமுக ஆட்சி எனவும், தற்போது தமிழக வளர்ச்சி பாதையில் உள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

அன்புமணி, தொழில்துறையில் பிற தென் மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கியுள்ளதாக கூறியதற்கும், அமைச்சர் ஒருவரே அதை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பிடிஆர் பதிலளிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருந்தது, அதனால்தான் தொழில்துறை சரிவு ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.
பிடிஆர் விளக்கத்தில், தேசிய உற்பத்தியில் தமிழ்நாடு 11% பங்கைக் கொண்டிருந்த நிலையில் தற்போது அது 9% ஆக குறைந்துள்ளதாகவும், சேவைத் துறையில் மட்டும் தான் வளர்ச்சி காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். இதில் முக்கிய காரணம் அதிமுக காலத்தில் தொழில்துறைக்கு போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பதே.
2000 முதல் 2020 வரை தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, இன்று தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சி பாதையில் திரும்பியுள்ளதாகவும், தற்போது 9.69% வளர்ச்சியுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் பிடிஆர் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கி திட்டமிட்டு செயல்படுகிறது என்றார்.
அன்புமணியின் விமர்சனம் அரசியல் நோக்கத்துடன் நிகழ்ந்ததாகவும், தனது குடும்ப பிரச்சனைகளை மறைக்கவே இவ்வாறு பேசுகிறார் என்றும் பிடிஆர் விமர்சித்தார். அவர் பேசிய கருத்துகள் அரைபாடாக எடுத்துக் கொண்டு திமுக ஆட்சியை விமர்சிக்க முயற்சி செய்ததாகக் கூறிய பிடிஆர், இது சற்று கேலியாகவே உள்ளதென தெரிவித்துள்ளார்.