காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து திருப்பதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ்களை எம்.எல்.ஏ.,க்கள் எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கியுள்ள புதிய பேருந்துகள் விழுப்புரம் கோட்டத்தில் காஞ்சிபுரம் மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளில் ஒன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து புனித நகரமான திருப்பதி செல்லும் வழித்தடத்திற்கு ஒதுக்கப்பட்டு அதன் தொடக்க விழா காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்று, காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், பேருந்தில் ஏறிய எழிலரசன் எம்.எல்.ஏ., ஆர்வம் காரணமாக, திடீரென திருப்பதி பேருந்தின் டிரைவராக மாறி, பேருந்தை பின்தொடர்ந்து சென்று, பேருந்தின் இயக்கத்தை ஆய்வு செய்தார்.
திடீரென டிரைவராக மாறி பேருந்தை ஓட்டிச் சென்ற எம்எல்ஏவின் செயலைக் கண்டு பயணிகளும், பொதுமக்களும் ஆச்சரியமடைந்தனர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் திலகர், ராம் பிரசாத், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு மிகக் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. மேலும், கல்பாக்கத்தில் இருந்து திருப்பதிக்கு வந்த பேருந்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நின்றபோது, இருக்கைகள் இல்லாததால், பயணிகள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என செங்கல்பட்டு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக திருப்பதிக்கு புதிய அரசு பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முதல் இயக்கப்பட்டது.
இந்த புதிய பேருந்து சேவையை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஆகியோர் முதல் டிக்கெட் எடுத்து பயணித்தது குறிப்பிடத்தக்கது.