சென்னை : என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது என்று மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் வேதனை தெரிவித்துள்ளார் –
புகழ்பெற்ற இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) மறைந்துள்ள செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் நேற்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில் , “இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.