சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமி, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து கடந்த ஜனவரி 3-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்., ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விக்கிரவாண்டி பள்ளி வழக்கு விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அப்போது நீதிபதிகள், “சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக் கோரி மனுதாரர் கடந்த ஜனவரி 6-ம் தேதி அரசிடம் மனு தாக்கல் செய்து, அரசுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பொதுநல வழக்கு தொடரும் முறையை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ‘மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றாலும், அவரது மனுவுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும்’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.