சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, கலப்பு வெடி பொருட்கள் தயாரிக்க தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக 60 சதவீத பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்திற்கும் மேல் சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே விற்பனை முடங்கியது.
உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 95 சதவீதத்திற்கும் மேல் விரைவாக விற்பனையானது. தமிழகத்தில் ரூ.450 கோடியும், நாடு முழுவதும் ரூ.6000 கோடியும் பட்டாசு வியாபாரம் நடக்கிறது.
இந்த ஆண்டு பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து, உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்திக்கான அனுமதி வழங்குவதில் தாமதம், சிறு பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி பகுதியில் 2,500-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆடிப்பெருக்கு அன்று பூஜை செய்து தீபாவளி விற்பனை தொடங்கியது.
ஆனால், வடமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவு வராததால், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். வடமாநிலங்களில் சில இடங்களில் கிடங்குகளில் பட்டாசுகள் வெடித்தன.
இதனால் பட்டாசுகளை வாங்கி இருப்பு வைக்க வடமாநில வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு ஆலை மற்றும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத பட்டாசு ஆலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் பட்டாசு ஆலை மற்றும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இதனால் வடமாநிலங்களில் பட்டாசு கிடங்கு மற்றும் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வடமாநில வியாபாரிகளின் கொள்முதல் மந்தமாக உள்ளது.
எனினும், ஆயுதபூஜைக்கு பின், பட்டாசு விற்பனை அதிகரிக்கும் என, உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காத்திருக்கின்றனர்.