சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் நான்கு நாள் தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு பெட்டிகளில் அத்துமீறி ஏறும் பயணிகளை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பல லட்சம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சொந்த மாநிலத்திற்கு செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தையே பயன்படுத்துகிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கின்றது. பொதுவாக முன்பதிவு இல்லாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி இருக்கையை ஆக்கிரமிப்பது வழக்கம்.
மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இதுபோன்ற அத்துமீறல் அதிகமாக நடக்கிறது. இதனை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் பயணிகளை வரிசையில் நிறுத்தி ஒருவர் பின் ஒருவராக அனுமதித்து வருகின்றனர். முன்பதிவு இல்லாத பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏற முயற்சித்தால், அவர்கள் தடுக்கப்பட்டு இறக்கிவிடப்படுகிறார்கள்.
இந்த நடைமுறை தீபாவளி வரை தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் முன்பதிவு கட்டுப்பாட்டை மீறாமல், அமைதியான முறையில் பயணிக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார். பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பண்டிகை காலங்களில் இதே நடவடிக்கை தீவிரமாக அமுல்படுத்தப்படுகிறது.