சென்னை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக வர்த்தக அணி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் நடந்த தவெக மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்களில், தாயுமானவர் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய மாநில வர்த்தக அணித் தலைவர் காசி முத்து மாணிக்கம், “விஜயின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது, பொதுமக்கள் அவருக்கு அடுத்த தேர்தலில் கடுமையான பாடம் புகட்டுவார்கள்” என்று கூறினார்.
மறுபுறம், விஜய் தனது பேச்சில், “ஸ்டாலின் அங்கிள் வெரி ராங் அங்கிள். திமுக அரசு வெளியில் பாஜகவுக்கு எதிராக நடித்து உள்ளுக்குள் கூட்டணி வைத்திருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதோடு, ஊழல், பெண்கள் பாதுகாப்பு, கல்வி, டாஸ்மாக் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
இந்த பேச்சு பரவலான அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதி தெரிவித்துள்ளது.