சென்னை: தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் இன்று நடைபெற்றன. மொத்தம் 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 4,18,791 பேர் தேர்வை எழுதியதாகவும், 1,34,843 பேர் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் 75.64 சதவீத வருகை பதிவாகியுள்ளது. தேர்வில் பெண்கள் உரிமைத் தொகை மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கேள்விகள் இடம்பெற்றன.

மொத்தம் 1,905 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. 645 பணியிடங்களுக்காக போட்டி நடைபெற்ற நிலையில், ஒரு இடத்திற்கு சுமார் 650 பேர் வரை போட்டியிடும் நிலை ஏற்பட்டது. தமிழ் பகுதி எளிமையானதாக இருந்ததாக மாணவர்கள் கூறினாலும், கணிதம் மற்றும் திறனறிவு கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. 200 வினாக்களில் குறைந்தது 150 வினாக்களுக்கு சரியாக பதிலளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். சில தேர்வர்கள் தாமதமாக வந்ததால் தேர்வு மையத்தில் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றனர்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறியதாவது, குரூப் 2 தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும், முதன்மைத் தேர்வு 2026 மார்ச் மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், டிஎன்பிஎஸ்சியின் 2026 ஆண்டிற்கான கால அட்டவணை டிசம்பரில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.