சென்னை: கிருஷ்ணரின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்க அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்து வேண்டிய வரங்களை பெறலாம். கிருஷ்ணர் துதி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்தோத்திரம் நாராயணீயம். கிருஷ்ண ஜெயந்தி அன்று இதை படிப்பதன் மூலம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
மஹா விஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படுபவனே! ஆனந்த வடிவானவனே! கோபியரின் மனத்தில் இருப்பவனே! துன்பம் நீங்க, பக்தியோடு உன்னை வணங்குகிறேன். மும்மூர்த்தியில் சிறந்தவரே! சர்வேஸ்வரனே! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பவன் நீயே என்று கூறப்பட்டுள்ளது. உன்னையே ஆதிசங்கரரும் போற்றி வணங்கியுள்ளார். அந்த திருப்பாதங்களை போற்றுகிறேன்.
தேவாதி தேவனே! அனைவருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மை இல்லாதவற்றில் ஆசை கொண்டு துன்பப்படும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா இன்பத்தையும் அடைவான். ஓடோடி வந்து அருள்புரிய வேண்டுமென உன்னை வணங்குகிறேன்.
எங்கும் நிறைந்தவனே உடல், மனம், மொழியால் இந்த பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ, அனைத்தையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன்னை நினைக்காத நாளில்லையே! உன் திருவடியில் சரணடைகிறேன்.
உன்னிடம் சரணடைந்தவர்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவர். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் எனக்கு கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும். ருஷோத்தமா! கங்கா நதியில் நீராடுதல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக் கிராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளுக்கு வழிவகுக்கும். இந்த எட்டு வழிகளிலும் என்னை ஈடுபடுத்தி நல்லருள் புரிவாயாக!
இந்த துதியை பாடி கிருஷ்ணரின் பரிபூரண அருளை பெற்று சிறந்த வாழ்வு வாழுங்கள்.