சென்னை: வாகன பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
வாகனம் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.
கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம் கார் வாஷிங்தான். காரைத் துடைத்து சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு. வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.
நடுவழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்சனையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்.
இதெல்லாம் காரால் வரும் பிரச்சனைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்சனைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
காரைப் பளிச்சென்று வைத்திருப்பது மட்டுமல்ல காருக்கு சின்னச் சின்னப் பிரச்சனைகள் என்றாலும், அதை உடனடியாக நீங்களே சரிசெய்து, சர்வீஸ் சென்டரிடம் இருந்து பெரிய பில் வராமல் தடுக்க முடியும்.
உங்கள் காரைச் சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும். ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், உங்கள் கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்.
கார் பராமரிப்புக்கு என்று குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். அதை எக்காரணம் கொண்டும் வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள். காரைக் கையாள்வதற்கு முன், அதன் உரிமையாளர் கையேட்டினை (யூசர் மேனுவல்) முழுவதும் படிக்க வேண்டும்.
எப்போதுமே குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் மட்டுமே பெட்ரோல் நிரப்புவது நல்லது. என்ன பெட்ரோல் உங்கள் காருக்குச் சரியாக இருக்கும் என்று யூசர் மேனுவலிலேயே இருக்கும். அதற்கேற்றபடியான பெட்ரோல் நிரப்ப வேண்டும்.
✇ விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதைவிட, தரமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதே மேல்! விலை அதிகமான பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், காரின் மைலேஜ் அதிகரித்துவிடாது. பர்ஸின் கனம்தான் குறையும்.
பெட்ரோல் நிரப்பிவிட்டு, மூடியை பங்க் ஊழியர் சரியாக மூடுகிறாரா என்று செக் செய்ய வேண்டும். மூடி சரியாக மூடவில்லை என்றால், பெட்ரோல் ஆவியாக வெளியேறிவிடும். அதனால் எப்போதுமே பெட்ரோல் மூடி டைட்டாக மூடப்பட்டிருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும்.