சேலம்: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிபெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் பணிநாளாக அறிவிக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த தீரன் சின்னமலை, இளமையிலேயே இளைஞர் படைகளை உருவாக்கி, பல்வேறு வித்தைப் பயிற்சிகளைக் கற்றுத் தந்து தீரத்துடன் விளங்கினார். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர்.
கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 3-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது” என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் முக்கிய அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.