தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நன்மதிப்பை பெற்ற டாக்டர் கிருஷ்ணனுக்கு மருத்துவர் தினத்தை முன்னிட்டு பூதலூர் அரிமா சங்கம் சார்பில் சால்வை போர்த்தி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் ஓய்வில்லாத பணி மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தங்களை நம்பி வரும் மக்களின் நோய் தீர்த்து நீண்ட நேரம், தூக்கமில்லாத இரவுகள் மற்றும் தனிப்பட்ட தியாகங்கள் இருந்தபோதிலும், மற்றவர்களை குணப்படுத்த தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் மருத்துவர்கள் மீது பாராட்டு என்ற வெளிச்சம் போட்டுக் காட்டும் நாள்தான் மருத்துவர்கள் தினம்.
இந்த மருத்துவர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் மக்கள் மத்தியில் மிகவும் நன்மதிப்பை பெற்ற சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான மருத்துவ சேவையாற்றி வரும் டாக்டர் கிருஷ்ணனுக்கு கௌரவம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பூதலூர் அரிமா சங்கம் சார்பில் தலைவர் ராஜா மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள், 324F மாவட்டத்தின் மண்டல தலைவர் திருமாறன், மாவட்ட பிஆர்ஓ செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பூதலூர் பகுதியில் மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் கிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை டாக்டர்கள், கால்நடை மருத்துவர், பல் டாக்டர் என மருத்துவ சேவை புரிந்து வரும் மருத்துவர்களை நேரில் சந்தித்து பூதலூர் அரிமா சங்கம் சார்பில் கௌரவித்தனர்.