சென்னை: குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று பொங்கல் பரிசுப் பெட்டிகளுக்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சை அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி, பொங்கல் பரிசுப் பெட்டிகள் வழங்குவதற்காக வீடு வீடாக டோக்கன்கள் விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. நியாய விலைக் கடை ஊழியர்கள் நேற்று முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்தனர். பொங்கல் பரிசுப் பெட்டிகள் விநியோகம் வரும் 9-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. கரும்பு கொள்முதல் செய்வதற்கான பணம் மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
விவசாயிகள் தங்களது கரும்புகளை https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட இணைப் பதிவாளர்களை தொடர்பு கொண்டும் விற்பனை செய்யலாம். இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள் விவசாயிகளை அணுகினால் அல்லது தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.