தமிழக அரசின் புதிய வளர்ச்சி திட்டங்களில் முக்கியமானதாக மினி டைடல் பூங்கா அமைப்பது விருதுநகர் மாவட்டத்திலும் துவக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டதுடன், பூங்கா அமைக்க ஏற்புடைய இடம் தேர்வு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா அந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது இந்த திட்டத்துக்கு தொடக்க கட்டத்தில் வலு சேர்த்திருக்கிறது. தற்போது முதல் கட்டமாக ஆலோசகர்கள் மற்றும் திட்ட மேலாண்மை இயக்குநர்களை தேர்வு செய்யும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிட்கோ சார்பில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு மாதத்தில் டெண்டரில் ஆர்வம் கொண்ட நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். அதன்பின் மூன்று மாதங்களில் நிலையான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, திட்டத்தின் வடிவமைப்பும் வெளியிடப்படும். இந்த திட்டம் முழுமையடையும் போது, விருதுநகர் மாவட்டம் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய மையமாக மாறும்.
மினி டைடல் பூங்கா மட்டுமல்லாமல், இ.குமாரமங்கலத்தில் ரூ.1894 கோடி மதிப்பில் மத்திய அரசின் அனுமதியுடன் ஜவுளி பூங்காவும் உருவாகி வருகிறது. சுமார் 1,000 ஏக்கரில் பரப்பளவில் உருவாகும் இந்த பூங்காவிற்கான சிட்கோ அலுவலக கட்டிடமும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன, மேலும் தொழில்துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது தொழில்நிறுவனங்களை இங்கு நிறுவ ஆர்வம் காட்டியுள்ளன.
இந்த இரண்டு பெரும் திட்டங்களும் விருதுநகர் மாவட்டத்துக்கு வளர்ச்சியின் புதிய வாயிலாக அமைந்துள்ளன. இதன்மூலம், இளைய தலைமுறையினர் வேலையிக்காக வேறு மாவட்டங்களை நாட வேண்டிய நிலை மாற்றம் பெறும். தொழில்கள் வளர்ந்து வருமானம் பெருகும் சூழல் உருவாகும். அரசின் திட்டங்கள் நேர்த்தியாக நிறைவேறினால் விருதுநகர் மாவட்டம் தொழில் வளர்ச்சியின் மையமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.