சென்னை: கடந்த சில மாதங்களாக தொடர் மழையால் வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்த வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 60 முதல் 65 லாரிகள் வெங்காயம் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
தற்போது அந்த மாநிலங்களில் மழை மற்றும் பயிர் சேதம் காரணமாக வெங்காய வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 லாரிகள் மட்டுமே வெங்காயம் வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலை கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டது. தொடர்ந்து கிலோவுக்கு ₹100 ஆக உயர்ந்தது.
சில்லரை காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.120 முதல் 130 வரை விற்கப்படுகிறது. தற்போது உச்சத்தை எட்டியுள்ள வெங்காயத்தின் விலை இன்னும் சில வாரங்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சமையலில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியை தாங்கும் முன்னரே பூண்டு விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு வருகிறது. தினமும் 150 டன் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து 25 டன் பூண்டு மட்டுமே வருகிறது. இந்த தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன் மொத்த விலையில் கிலோ ₹300-க்கு விற்ற முதல் ரக பூண்டு தற்போது ₹350 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில், மொத்த விற்பனை கடைகளில், பூண்டு வகைக்கு ஏற்ப கிலோ ₹220 முதல் ₹350 வரையிலும், சில்லரை விற்பனையில் கிலோ ₹300 முதல் ₹400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பூண்டு ₹450 முதல் ₹500 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலை ஏற்கனவே கிலோ ₹100ஐ தாண்டிய நிலையில் தற்போது பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பூண்டு மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து மட்டுமே அதிக அளவில் பூண்டு விற்பனை செய்யப்படும். இந்த மாநிலங்களில் பூண்டு சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் பூண்டு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஜனவரி இறுதிக்குள் மீண்டும் வரத்து அதிகரித்து, பூண்டு விலை படிப்படியாக குறையும் என்றார்.