சென்னை: தமிழகத்தில் தினசரி சராசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட். குளிர்காலத்தில் 10,000 மெகாவாட்டாக குறைந்து கோடையில் 20,000 மெகாவாட்டாக அதிகரிக்கிறது. இந்த ஆண்டு மே 2-ம் தேதி தினசரி மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது.
இதுவே இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். ஆண்டுதோறும், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கினாலும், பல மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் முதல் மழை பெய்யும். இதன் காரணமாக அந்த மாதத்தில் மின் பயன்பாடு வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தியது.
இதனால், மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தினசரி மின் தேவை 17,500 மெகாவாட்டாக அதிகரித்தது. மேலும், காற்றாலை சீசன் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்ததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் வாரியம் சிரமம் அடைந்தது. இந்நிலையில், சென்னையில் ஒரு வாரத்துக்கு முன்பு கனமழை பெய்தது. மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களைத் தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. இதன் மூலம் தினசரி மின் தேவையை மின்வாரியம் எளிதாக பூர்த்தி செய்து வருகிறது.