தாராபுரத்தில் நடைபெற்ற எழுச்சி பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திமுக ஆட்சியில் ஊழலும் குடும்ப ஆட்சியும் மட்டுமே நடைபெறுகிறது என அவர் குற்றஞ்சாட்டினார். ஒரு முதல்வர் இருந்தாலே மக்கள் சிரமப்படுகின்றனர், ஆனால் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் ஆகியோரின் செல்வாக்கால் நான்கு முதல்வர்கள் ஆட்சி நடத்துவதாக விமர்சித்தார்.
52 மாதங்களில் தாராபுரம் தொகுதிக்கு எந்த பெரிய திட்டமும் வரவில்லை என்றும், ஊழல், லஞ்சம், ‘கலெக்ஷன் கமிஷன்’ ஆட்சி மட்டுமே நடந்ததாக அவர் கூறினார். பத்திரப்பதிவில் மெகா ஊழல், டாஸ்மாக் விற்பனை மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடி செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மின்சாரம், வரிகள், கட்டுமானப் பொருட்கள் ஆகிய அனைத்திலும் விலை உயர்வு மக்களை சிரமப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

மளிகைப் பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய், கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் அதிக விலையில் விற்பனையாகி வருவதை எடுத்து கூறிய அவர், இதனால் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவது கனவாகிவிட்டது என்றார். போதைப்பொருள் விற்பனை அதிகரித்து காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதிமுக ஆட்சி தான் மக்களை காப்பாற்றும், பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வழங்கும் என உறுதியளித்தார்.
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திருமண உதவி திட்டம், தாலி தங்கம், அம்மா மினி கிளினிக், லேப்டாப் திட்டம், வேட்டி சேலை, இலவச பொருட்கள் போன்ற திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம், விஞ்ஞான கல்வி வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார். “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்” என உரையை நிறைவு செய்தார்.