சென்னை அரசியல் சூழலில் அதிமுக தலைவர்களின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மூத்த தலைவர் செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் நிலை குறித்து ஆலோசித்தார். அவர் அதிமுக ஒற்றுமைக்காகவே இந்த சந்திப்பு என கூறினாலும், பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஈரோடு பிரமுகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இவர்களில் பலர் தங்களது முழு ஆதரவு எடப்பாடிக்கே எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், செங்கோட்டையன் பஞ்சாயத்து பேசும் வேளையில், அவரின் சொந்த மாவட்ட நிர்வாகிகளையே எடப்பாடி வளைத்தது என பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறார் என்றாலும், அது இயல்பான கூட்டமல்ல, திட்டமிட்ட கூட்டம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேசமயம் எடப்பாடி தனது அனுபவத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகிறார். கட்சியில் முக்கிய முகங்களை எவ்வாறு கையாள்கிறார் என்பது ஜெயலலிதாவின் பாணியை நினைவுபடுத்துகிறது என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் பாஜகக்கு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது. கூட்டணி பற்றி அமித்ஷா தொடர்ந்து பேசினாலும், தனிப்பெரும்பான்மை மீதான நம்பிக்கையை எடப்பாடி வலியுறுத்தி வருகிறார். இதனால் பாஜகவுடனான உறவு சீர்குலைய வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில், செங்கோட்டையனின் நடவடிக்கை அவருக்கே பாதகமாகவும், எடப்பாடிக்கே பிளஸ் பாயிண்டாகவும் மாறி விட்டது.