மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றியபோது பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அதிமுகதான் என்றும், திமுக திட்டமிட்டு தவறான பிரச்சாரம் செய்து வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டை குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தி உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். போதைப்பொருள் வியாபாரம் அதிகரித்து இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், திமுக அரசு இதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார். மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.200 கோடி சொத்துவரி ஊழல் மற்றும் டாஸ்மாக் ஊழல் குறித்து எடுத்துரைத்த அவர், இவை அனைத்தும் ஆட்சியின் தோல்வியை காட்டுவதாக தெரிவித்தார்.
திமுக அரசின் செயல்பாடுகளை சாடிய அவர், மக்கள் மீது அதிக வரிகள் விதித்து வாட்டி வதைக்கிறது என்றார். அடிப்படை வசதிகள் இல்லாமல் முதலீட்டாளர்களை ஈர்க்க வெளிநாடு செல்வது ஏமாற்று நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் அறிமுகமாகி, மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். திமுக அரசு ஊழலில் மூழ்கியுள்ள நிலையில், வரும் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.