சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையான விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி மீது முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் கூட கூட்டணி ஒப்பந்தங்களில் தேதி குறிப்பிடப்படாதது போலவே, எடப்பாடியும் தேமுதிக உடன் ஒப்பந்தம் செய்ததாக கூறினார். ஆனால், ராஜ்யசபா எம்.பி சீட் தொடர்பான விவகாரத்தில் தெளிவாகப் பேசி கையெழுத்திட்டோம் எனவும், முன்னாள் முதல்வரின் மாண்பை மதித்து ஆதாரங்களை வெளியிடவில்லை எனவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர், “பதவி கிடைக்கும் என நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம். இனி எடப்பாடியை நம்பத் தயாராக இல்லை. அவர் முதுகில் குத்திவிட்டார்” என நிர்வாகிகள் முன்னிலையில் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண கூட்டங்களுக்கு பணமும் மதுவும் கொடுத்து மக்கள் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தேமுதிக கூட்டங்களுக்கு கேப்டன் மீது உள்ள அன்பால் மக்கள் தானாக வருகிறார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் தேர்தலில் தேமுதிகவை தேடி அனைவரும் வருவார்கள், இட ஒதுக்கீடு குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்த பிறகே கூட்டணி பேசப்படும் என அவர் உறுதியளித்தார்.
கடந்த ஜூன் 19 நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், அதிமுக தரப்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு சீட் தரப்படவில்லை. இதனால் கட்சித் தரப்பில் அதிருப்தி நிலவுகிறது. இந்தச் சூழலில், பிரேமலதா விஜயகாந்தின் இக்கருத்துக்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.