சென்னை: “தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ‘புதிய கல்விக் கொள்கை’யை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சர்வதேச தாய்மொழி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது எக்ஸ் இணையதளத்தில், “உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தங்கள் தாய்மொழியைப் போற்றும் வகையில் இன்று ‘சர்வதேச தாய்மொழி’ தினமாக கொண்டாடப்படுகிறது.
இவ்வகையில், பன்முகத்தன்மை கொண்ட நம் பாரத நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் தாய்மொழியை நேசிக்கவும், பெருமை கொள்ளவும் வேண்டும் என்பதற்காக, தாய்மொழி தினத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எண்ணற்ற மொழிகளின் தாய்மொழியாகவும், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தழைத்தோங்கி, தமிழர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தமிழ் மொழியை, தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்.
அதே சமயம், குழந்தைப் பருவத்திலிருந்தே தாய்மொழிக் கல்வியில் நமது கற்றல் திறனைத் தொடங்குவது, ஒவ்வொரு மனிதனிடமும் மனித நேயம் மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதும், நம் மொழியின் பண்புகள் மீதும் கொண்ட அன்பை வலுப்படுத்துகிறது. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் ‘புதிய கல்விக் கொள்கை’யை நாடு முழுவதும் உள்ள அனைவரிடமும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகம் செய்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.