சென்னை: சென்னை – திருவள்ளூர் வழித்தடத்தில், அண்ணனூர் – திருமுல்லைவாயில் இடையே, ரயில் தண்டவாளம் சற்று தாழ்வாக காணப்பட்டது. இதையடுத்து மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொது போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை-திருவள்ளூர் மார்க்கத்தில் அண்ணனூர் – திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளம் சற்று தாழ்வாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதுகுறித்த விவரம் வருமாறு:- அண்ணனூர் – திருமுல்லைவாயில் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு பராமரிப்பு பணி நடந்தது. அதன்படி இன்று காலை இந்த தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது, தண்டவாளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தண்டவாளம் சற்று தாழ்வாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று இன்று காலை 8.20 மணிக்கு பராமரிப்பு பணிகளை தொடங்கினர்.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் மார்க்கத்தில் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும், சில ரயில்கள் எக்ஸ்பிரஸ் பாதையில் திருப்பி விடப்பட்டன.
இன்று காலை புறநகர் பகுதிகளில் இருந்து பணி நிமித்தம் சென்னைக்கு திருவள்ளூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சார ரயில்கள் வராததால் கடும் சிரமம் அடைந்தனர்.
ரயில்வே நிர்வாகம் முறையான அறிவிப்பு எதுவும் தெரிவிக்காததால், குழப்பம் அடைந்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் ரயில் வராததால், பலர் மாற்று வாகனங்களில் வேலைக்குச் சென்றனர்.
இதனிடையே, அண்ணனூர் – திருமுல்லைவாயில் இடையே ஏற்பட்ட தடம் புரண்டதில் ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்பட்டு, ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.