சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகத்தில் இதுவரை 67.80 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் கணினி மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 15.18 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளன. விரைவுப் பேருந்துகளில் வழங்கப்பட்ட 1.60 கோடி டிக்கெட்டுகளில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் கோட்டங்களில் மின்னணு டிக்கெட் முறை முழுமையாக அமலில் உள்ளது. சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய கோட்டங்களில் மார்ச் இறுதிக்குள் மின்னணு டிக்கெட் முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.