சென்னை: நடிகர் விஜய் தலைமையில் உருவான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் தளத்தில் பெரிய அலைகளை எழுப்பி வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் “உங்க விஜய் நா வரேன்” என்ற தலைப்பில் நடத்தும் பொதுக்கூட்டங்களில் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. கரூரில் அவர் தாமதமாக வந்த காரணத்தால் கூட்டம் மிகுந்த நெரிசலாக மாறி விபரீத நிலைக்கு சென்றது. விஜய் அங்கிருந்து புறப்பட்டதும், கூட்டத்தில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். சிலர் தண்ணீர் கேட்டு கத்த, விஜய் பேருந்திலிருந்தபடியே தண்ணீர் பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நெரிசல் பல உயிர்களை காவு கொண்டது.
இந்நிலையில், தனது மகனை இழந்த ஒரு தாய், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிடம் பேசுகையில், “என் மகன் விஜய்யை நம்பி கூட்டத்துக்கு போனான். அவன் நினைத்தது நிறைவேறணும். விஜய் சி.எம் ஆகணும். எங்களுக்கு அவர்மீது எந்தக் கோபமும் இல்லை. மகன் போயிட்டான், ஆனால் விஜய் என் மகன் மாதிரி தான். அவர் வெற்றி பெற வேண்டும்” என கூறினார். மேலும், விஜய் வீடியோ காலில் தன்னுடன் பேசிச் ஆறுதல் கூறியதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
இந்த வார்த்தைகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதுடன், விஜய்யின் அரசியல் பயணத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்ட நிலையில், விஜய் விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் “இது ஒரு தாயின் மனவலிமை, விஜய்க்கு பெரும் பொறுப்பும் ஆதரவும்” எனப் பதிவுகள் இடுகின்றனர்.