தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2 லட்சம் கன அடியை தாண்டியது. மேட்டூர் அணையில் இருந்து 2வது நாளாக வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 1.40 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாகவும், மாலை 6 மணிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.
ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள வீடுகளை தொட்டு தண்ணீர் ஓடுகிறது. ஒகேனக்கல்-நாட்றாம்பாளையம் சாலையில் நேற்று மாலை முதல் நாடார் கோட்டை பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒகேனக்கல், ஊதுமலை பகுதிகளில் 6 அவசரகால முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு காவேரி கரையோரப் பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில்… ஜூலை 29ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, 16 மதகுகள் வழியாக உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. நேற்று 2வது நாளாக வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நேற்று இரவு 1.71 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் கொள்ளளவு 93.48 டிஎம்சி.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு: இந்நிலையில் அணையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் அணையின் 16 கண் மதகு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆக., 3ம் தேதி (நாளை) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் சங்கர் பார்வையிட்டார்.
அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனல் மின் நிலைய வளாகத்தை சுற்றி, பூலாம்பட்டி செல்ல அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்: கோல்நாயக்கன்பட்டி, சங்கிமுனியப்பன் கோவில், பொறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மக்களின் பாதுகாப்பிற்காக 14 இடங்கள் ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு 56 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.