சென்னை : தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஏன்? என்பது குறித்து ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான CBT 2 தேர்வுக்கு 6000 க்கும் மேலானவர்கள் CBT 1 தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் இருந்து தகுதி பெற்றுள்ளார்கள். இத்தேர்வு வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு மையங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து தெலுங்கானா, ஆந்திரா, ஹைதராபாத் வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வர்கள் நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகும் நிலை உள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்நிலையில் வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது குறித்த ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ஆர்ஆர்பி தேர்வு ஒரே நேரத்தில் தேர்வர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு கூடுமானவரை சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் வசதிகள் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் தேர்வு மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது. வெவ்வேறு கேள்வித்தாள்கள் அளிக்கப்படும் என்பதன் அடிப்படையில் அது சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த இரண்டாவது தேர்வு முறை நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இதன் காரணமாகவே அனைவருக்கும் முடிந்த அளவு சொந்த மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தாண்டி உள்ளவர்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. இது ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான் என்று ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அதேபோல பட்டியல் சமூக மாணவர்களுக்கு இலவச ரயில் பயணமும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.