சென்னை: உதவிப் பேராசிரியர் பதவிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 26) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றவும், முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து உதவித்தொகை பெறவும், நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசிய தேர்வு முகமை (NTA) சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
இதில், சில அறிவியல் பாடங்களுக்கு மட்டுமே சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு பிரத்தியேகமாக நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 26 முதல் 28 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 3-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, இதற்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆர்வமுள்ளவர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் மூலம் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூன் 27 ஆகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய ஜூன் 28 மற்றும் 29 வரை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது சரியான விளக்கத்திற்கு csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று NTA வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.