சென்னை: உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:-
நடப்பு கல்வியாண்டில் (2025-26) ஜூன் செமஸ்டர் சேர்க்கைக்கான தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, யுஜிசி விதிமுறைகளின்படி முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளை கற்பிக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 4-ம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. தற்போது, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஏப்., 15-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ என்ற இணையதளம் மூலம் அவசரமாக விண்ணப்பிக்க வேண்டும்.