சென்னை: காவிரி, தென்பெண்ணை நதிநீர் பிரச்னையில் கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். கர்நாடக துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான சிவக்குமார் நிருபர்களிடம் பேசுகையில், “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடகாவின் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான பாசன திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம் பலமுறை பேசியுள்ளேன்.
இதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படுவதை ஏற்க மாட்டோம். மேகதாது அணை உள்ளிட்ட இந்தத் திட்டங்களை எந்த வகையிலும் செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். தென்பெண்ணை நதி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். வேறு எந்த வழியையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.” ஒருபுறம் பெங்களூரு மக்களை திருப்திபடுத்தும் வகையில், மறுபுறம் மத்திய அமைச்சரை எச்சரிக்கும் வகையில் தமிழகத்திற்கு எதிரான ஒட்டுமொத்த துரோக நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.
இந்த இரண்டு பிரச்னைகளும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளன. எனவே, நீதிமன்றத்தையும் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை கோரியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக விவசாயிகள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்துதான் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டியதாயிற்று. மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக மக்களை ஏமாற்றும் மத்திய அரசின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.