சென்னை: சுங்கச்சாவடியில் FASTag ஸ்கேன் செய்யப்படும் நேரத்திற்கு ஏற்ப இந்திய தேசிய கட்டணக் கழகம் இரண்டு விதிகளை மாற்றியுள்ளது. இதன்படி, சுங்கச்சாவடியை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், வாகனத்தின் FASTag கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டாலோ அல்லது வங்கி இருப்பு குறைவாக இருந்தாலோ, பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். FASTag ஸ்கேன் செய்யப்படாமல், ரீசார்ஜ் செய்ய 10 நிமிடங்களுக்கு மேல் எடுத்தால், பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
இந்த புதிய விதிகளின்படி, பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். இதனால் அவசர பயணங்கள் மற்றும் உள்ளூர் பயணங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளை திரும்ப பெறுவது, மத்திய நெடுஞ்சாலைத்துறையின் கையில் உள்ளது.
இந்நிலையில், புதிய விதிகளின்படி, பிளாக்லிஸ்ட், இரட்டை அபராதம் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, பயணத்திற்கு முன், ஃபாஸ்டேக்கில் போதுமான பேலன்ஸ் இருப்பதை ஓட்டுநர்கள் உறுதி செய்ய வேண்டும். FASTag செயலில் உள்ளதா மற்றும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, FASTag நிலையைச் சரிபார்க்க வேண்டும். மேலும் FASTags பிளாக் லிஸ்ட் செய்யப்படுவதைத் தடுக்க KYC விவரங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்று FASTag நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.