விருதுநகர்: திமுக கூட்டணியில் உள்ள தவாக தலைவர் வேல்முருகன் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள வேல்முருகன், பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது ஆளும் திமுக கூட்டணியில் இருப்பவர் வேல்முருகன். இருப்பினும், அவருக்கும் திமுகவுக்கும் இடையே தூரம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மனிதக் குல விரோத கட்சி என்றும், தமிழக மக்கள் அவர்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வேல்முருகன் கூறியதாவது: “பாஜக ஒரு மனிதக் குல விரோத கட்சி. உத்தரப் பிரதேசத்தில் பூட்டி இருக்கும் மசூதியைத் தென்னை மரத்தைக் கொண்டு உடைக்க முயற்சிக்கிறார்கள். அங்குள்ள இஸ்லாமிய இளைஞர் மீது ஹோலி என சொல்லி வண்ணம் பூசுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடித்துக் கொல்கிறார்கள். ஓடும் பெண்ணின் தலையில் முட்டையை வீசி உடைக்கிறார்கள். இது போன்ற அநியாயங்களை ஏற்க முடியாது. ஏற்கனவே மாட்டுப் பிடித்துச் செல்வோர், மாட்டுக்கறி விற்பவர்களை அடித்துக் கொன்றுள்ளனர். மனித குலத்திற்கே எதிரான இந்த பாஜகவுடன் நாங்கள் எந்த விதத்திலும் சமரசம் செய்ய மாட்டோம். பாஜகவுக்கு எதிராக வலுவாக போராடுவோம். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்” என்றார்.
கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தலுக்கு இன்னும் காலமிருக்கிறது. இப்போது கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு, மீனவர்கள் கைது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக போராடி வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்று உரிமைகளை மீட்டுள்ளேன். இதனால் அந்த நிறுவனங்களுக்கு வேல்முருகனை கண்டாலே பிடிப்பதில்லை. அவர்கள் அரசு மூலம் தொந்தரவு செய்கிறார்கள். பல இடங்களில் எனது கட்சிக்காரர்களை கைது செய்து துன்புறுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “நாமக்கல், ஈரோட்டை நாசமாக்கிய சாய பட்டறைகள் தற்போது கடலூர் மாவட்டத்துக்கு வரத் திட்டமிட்டுள்ளன. அதை எதிர்த்து 25,000 மக்களை இழுத்துப் போராட்டம் நடத்தினேன். இதனால் பெருநிறுவனங்கள் என் மீது கோபத்தில் உள்ளன. அவர்களின் பணத்திற்கு விசுவாசமாக இருப்போர்கள்தான் என் மீது அவதூறுகளை அள்ளிவிடுகிறார்கள்” என்றார்.
முன்னதாக, சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, வேல்முருகன் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்து பேசினார். அப்போது, அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து, வேல்முருகனின் கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த வேல்முருகன், சபாநாயகரின் இருக்கைக்குச் சென்று முழக்கமிட்டார்.
இதனால், சபாநாயகர் அவை விதிகளை மீறியதாகக் கூறினார். முதல்வர் ஸ்டாலினும், வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக செயல்படுவதாகவும், அவை மாண்புக்கு எதிராக நடந்துகொள்வதாகவும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.