புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. “வருமான வரி மசோதா 2025” என்று அழைக்கப்படும் புதிய மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். மதிப்பீட்டு ஆண்டு வரி ஆண்டாகவும், முந்தைய ஆண்டு நிதி ஆண்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1 முதல் தொடங்கும் 12 மாதங்களைக் குறிக்கிறது. அதன்படி, இது நிதியாண்டின் கட்டமைப்போடு சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 2024-25 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருமானம் அடுத்த நிதியாண்டில் மதிப்பிடப்படுகிறது.
இந்த புதிய வரி விதிப்பில், 2025-26 மதிப்பீட்டு ஆண்டாக இருக்கும். மேலும், புதிய மசோதா மத்திய நேரடி வரிகள் வாரியத்தை வரி நிர்வாக விதிகளை நிறுவவும், இணக்க நடவடிக்கைகளை செயல்படுத்தவும், அடிக்கடி சட்டத் திருத்தங்கள் தேவையில்லாமல் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை செயல்படுத்தவும் அனுமதிக்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F குறிப்பிட்டுள்ளபடி, தனிநபர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.