கோவை: நகரின் ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன், பிரபல பிரியாணி கடையில் ஆர்டர் செய்த முழு பொரித்த கோழியில் ‘லெக் பீஸ்’ இல்லாததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அந்த ஓட்டல் நிர்வாகம் எடிசனுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி, எடிசன் தனது குடும்பத்துடன் உப்பிலிபாளையம் சாலையில் உள்ள பிரியாணி கடைக்கு சென்றார். அப்போது அவர் தந்தூரி சிக்கன் மற்றும் முழு பொரித்த கோழி ஆர்டர் செய்தார். பரிமாறப்பட்ட கோழியில் லெக் பீஸ் இல்லாததால் ஊழியர்களிடம் கேட்டபோது சரியான பதில் தர முடியாமல் தவறினார்கள். மேலும், குறையை சுட்டிக்காட்டிய அவரிடம் ஊழியர்கள் ஆவேசமாக நடந்துகொண்டதாகவும் அவர் புகார் அளித்தார்.
பின்னர் வற்புறுத்தியதன் பேரில் லெக் பீஸ் துண்டுகளை தாமதமாக கொண்டு வந்து கொடுத்திருந்தாலும், “முழு கோழிக்கு பணம் கொடுத்தும் முழுமையான உணவு கிடைக்கவில்லை” என எடிசன் வலியுறுத்தினார். இதனால் அவர் மன உளைச்சலுக்கும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கும் ஆளாகியதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் நீதிமன்றம், உணவக நிர்வாகம் நுகர்வோர் உரிமையை மீறியுள்ளது எனக் கூறி, எடிசனுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. சினிமா காட்சிகளை நினைவூட்டும் விதமாக தொடங்கிய இந்த சம்பவம், உணவகங்கள் நுகர்வோர் உரிமையை மதிக்க வேண்டிய அவசியத்தை வெளிக்காட்டுகிறது.