கோவை: சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்யப்படும் என கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சி புல்லுக்காடு பகுதியில் பூஜை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பெண் மற்றும் அவரது 5 மாத குழந்தை மீது மாடு மோதியதில் பலத்த காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், கோவை மாநகராட்சி ஊழியர்கள் புல்லுக்காடு பகுதியில் சாலையோரங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து மாட்டு தொழுவத்தில் அடைத்தனர். மேலும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், வழக்குப்பதிவு செய்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது.