திருவொற்றியூர்: அரிய வகை கடல் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர், பிப்ரவரி மாதங்களில் தமிழக கடற்கரைக்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்வாறு வரும் ஆமைகள் கடலில் உள்ள மீன்பிடி படகுகள், என்ஜின்கள், வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இதனால், கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
கடந்த மாதம் காசிமேடு, திருவொற்றியூர், மாமல்லபுரம் பகுதிகளில் அதிக அளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கரை ஒதுங்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை எண்ணூர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரைகளில் 30-க்கும் மேற்பட்ட ஆமைகள் பள்ளத்தில் உள்ள தடுப்பு கற்கள் மற்றும் வளைந்த கற்களில் கிடந்து இறந்தன. சில ஆமைகள் இறந்து பல நாட்களாக கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் அப்பகுதி மீனவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சென்னை மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”கடல் நீரோட்டம் மாறி ஆந்திர கடல் பகுதியில் இருந்து இந்த ஆமைகள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக கடல் சீற்றமாக உள்ளது. இந்த ஆமைகள் ஓரிரு நாட்களில் இறந்ததாக தெரியவில்லை. பல நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,” என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”இறந்த ஆமைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்க வாய்ப்புள்ளது. மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக வல்லுநர்கள் அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றார். இது குறித்து ஆமை பாதுகாப்பு அமைப்புகள் கூறும்போது, “இந்த ஆமைகள் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை வட தமிழக கடலோர பகுதிகளுக்கும், ஆந்திரா, ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கும் சென்று முட்டையிடும்.
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, கடலோரப் பகுதியில் இருந்து 8 கடல் மைல் தூரம் வரை மோட்டார் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்துமீறி மீன்பிடிக்கப்படுகிறது. ஆமைகள் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் கடலின் மேற்பரப்பிற்கு வந்து மூச்சு விடுகின்றன, பின்னர் மீண்டும் தண்ணீருக்குள் செல்கின்றன. ஆனால் மீனவர்கள் விதிகளை மீறி ஆமைகள் செல்லும் பாதையில் மீன்பிடிக்கும்போது வலையில் சிக்கி இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த ஆமைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தால், கண்கள் வீங்கி, கழுத்து வீங்கி இருக்கும். இதை பிரேத பரிசோதனை இல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம். இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளில் இதைக் காணலாம். நாங்கள் சேவை செய்யும் நீலாங்கரை முதல் கோவளம் வரை 183 ஆமைகளும், செம்மஞ்சேரி முதல் ஆலம்பாறை வரை 133 ஆமைகளும் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. தற்போது வடசென்னையிலும் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இது குறித்து ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றனர்.