ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
இதனால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது, பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, தாவரவியல் பூங்காக்கள் புல் மைதானத்தில் பிரமாண்டமான மலர் கோபுரங்கள், பல்வேறு வகையான அலங்காரங்கள் மற்றும் நுழைவு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அலங்கார வளைவுகள், பல்வேறு வகையான கொய்மால்களால் அலங்கரிக்கப்படும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி, அருகில் நின்று புகைப்படம் எடுப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் போது அமைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் அகற்றப்படவில்லை.
தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளதால், அலங்கார வளைவுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, பல்வேறு வகையான பூக்கள் மற்றும் அலங்கார செடிகள் கொண்ட பூந்தொட்டிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.