திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லி மற்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. கொச்சி கடவந்திராவில் இயங்கும் பிருந்தாவன் உணவு தயாரிப்புகள் என்ற நிறுவனம் இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். காலாவதியான மற்றும் கெட்டுப்போன ஏராளமான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, உணவு தயாரிக்க அந்த நிறுவனத்திற்கு முறையான உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த உணவு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு ரயில்வே ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.