சென்னை: இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழைகளின் உணவின் மிகப்பெரிய ஆதாரம் ரேஷன் கடைகள். மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மலிவு விலையில் மற்றும் ரேஷன் கார்டு மூலம் இலவசமாக உணவுப் பொருட்களை வாங்க விரும்பினால், அவர்களின் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
தமிழகத்தில் மொத்தம் 2.25 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் அதிகமானோர் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், பலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருப்பதாக புகார்கள் எழுகின்றன. இறந்தவர்களின் பெயர்களை நீக்காமல் இருப்பது, திருமணத்திற்குப் பின் வீட்டில் பெண்களின் பெயர்களை சேர்ப்பது, தாய் வீட்டில் பெயர் நீக்காமல் இருப்பது என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
ரேஷன் கடையில் ஏழை மக்களுக்கு விற்கப்படும் பொருட்களை வாங்கி சிலர் போலி சந்தையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதைத் தடுக்கவும், மானியம் மற்றும் இலவச உணவுப் பொருட்கள் உரிய நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும், ரேஷன் கார்டில் உள்ள தகவல்களைச் சரிபார்க்க கேஒய்சி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அல்லது நேரடியாக ரேஷன் கடைகளில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் KYC ஐ புதுப்பிக்கலாம். முதலில், செப்டம்பர் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு, தற்போது நீட்டிக்கப்பட்டு, அனைவரும் டிசம்பர் 31-க்குள் ரேஷன் கார்டில் கேஒய்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 31-க்குள் கேஒய்சி செய்யாவிட்டால், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம். எனவே பொதுமக்கள் தங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று தங்கள் கேஒய்சியைப் புதுப்பிக்கலாம்.
ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்தால் போதும், நமது விவரங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும். கேஒய்சியைப் புதுப்பிக்க ஆன்லைனில் செல்வதை விட நேரடியாக ரேஷன் கடைக்குச் செல்வது எளிது. டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு இருப்பதால், கடைசி நேரத்தில் சென்று அப்டேட் செய்வதைத் தவிர்த்து, கிடைக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.