கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சிக்கு உட்பட்ட பாலத்தங்கரை பகுதியில் மலை அடிவாரத்தில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஆடு, மாடுகளை வளர்க்கிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊருக்குள் சிறுத்தைப்புலி புகுந்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நான்கு கன்றுகளை சிறுத்தை இழுத்துச் சென்ற சம்பவத்தால் அப்பகுதி கிராமம் பெரும் பீதியில் உள்ளது.
தகவலறிந்து ஆத்தூர் கோட்ட வன அலுவலர் சேவியர் ஆரோக்கியராஜ் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
முதற்கட்டமாக, இரண்டு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கேமரா காட்சிகளை எடுத்தபோது, சிறுத்தை நடமாட்டம் தெரியவில்லை. இதையடுத்து நேற்று மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் மூன்று இடங்களில் 5 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மேலும் நேற்று வனக் காவலர் சிவக்குமார், உத்திரசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனக்காப்பாளர்கள் அருண்குமார், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது கீழ்பாலத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கெங்கவல்லி வனச்சரக வார்டன் சிவக்குமார் தெரிவித்தார்.
பச்சமலை பஞ்சாயத்து தலைவர் சின்னமணி பிரேம்குமார் மற்றும் வனத்துறையினர் கிராமத்திற்கு நேரில் சென்று குழந்தைகள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், இரவில் தனியாக வெளியே செல்லாமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.