சென்னை: முன்னாள் ராணுவ தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். அவருக்கு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் (83). இவர் டிசம்பர் 5, 1940 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தார்.
1959 இல் இந்திய இராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் இராணுவ பீரங்கி படையில் சேர்ந்தார். நீலகிரியில் உள்ள வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியிலும், புதுதில்லியின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார். பல்வேறு போர்களில் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவில் பணியாற்றினார். பல்வேறு ராணுவப் பிரிவுகளில் பணியாற்றியவர்.
அவர் செப்டம்பர் 30, 2000 முதல் டிசம்பர் 31, 2002 வரை இந்திய ராணுவத்தின் தலைவராகப் பணியாற்றினார். 43 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு 31 டிசம்பர் 2002 அன்று ஓய்வு பெற்றார். அதையடுத்து சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே அடையாறில் உள்ள சுந்தரராஜன் பத்மநாபனின் வீட்டிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தமிழக அரசு சார்பில் திரு.சுப்பிரமணியன் மற்றும் தட்சிண பாரத ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர்சிங் பிரார் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபனின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.அவரது முன்மாதிரியான தலைமையும், தேசத்தின் பாதுகாப்பில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.