திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் அக்டோபர் வரை நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற அரசு முகாம் தொடர்களை முன்னிட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நான்கு முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் மூலமாக தொழில் முனைவோர் மற்றும் கைவினைக் கலைஞர்கள் வழியக வேலை வாய்ப்பும் தொழில் விரிவாக்கத்துக்கும் தேவையான கடனுதவியும், மானியங்களும் வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் வெளியிட்ட அறிவிப்பின் படி, இத்திட்டங்கள் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் நாடுபவர்கள், முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆகியோருக்கேற்றவையாக இருக்கின்றன.

முதலாவது திட்டமான NEEDS திட்டம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 முதல் 45 வயதுடைய (சிறப்புப் பிரிவினர் 55 வரை) புதிய தொழில் முனைவோருக்காக உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவிக்கு வங்கி பரிந்துரை செய்யப்படும். அதிகபட்சமாக 25% வரை மானியமும், நேர்மையாக தவணை செலுத்துவோருக்கு 3% வட்டி மானியமும் வழங்கப்படும். இரண்டாவது திட்டமான AABCS, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கானது. இதில் கல்வித் தகுதி தேவையில்லை, 18 முதல் 55 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ₹1 கோடி வரை மானியத் தொகை வழங்கப்படுகிறது.
மூன்றாவது திட்டம் கலைஞர் கைவினைத் திட்டம், பாரம்பரிய கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது. இதில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், 25 வகையான கைவினைத் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ₹3 லட்சம் வரை வங்கி கடன், ₹50,000 வரை மானியம், மற்றும் 5% வட்டி மானியம் கிடைக்கும். நான்காவது திட்டமான UYEGP, வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கானது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுடையவர்கள் (சிறப்புப் பிரிவினருக்கு 55 வரை) விண்ணப்பிக்கலாம். ₹15 லட்சம் வரை கடனுடன் 25% மானியம், அதிகபட்சம் ₹3.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இந்த நான்கு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 0451-2904215, 2471609, 8925533943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவலுக்கு www.msmetamilnadu.tn.gov.in இணையதளங்களில் NEEDS, AABCS, KKT, UYEGP பக்கங்களை பார்வையிடலாம். இந்த திட்டங்கள் திண்டுக்கலில் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.