நாகர்கோவில்: கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதைக்கு கூடுதலாக ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில் பாதையில் இரட்டை ரயில் பாதை பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 87 கி.மீ., இரட்டை ரயில்பாதை பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக தமிழகத்தில் திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 37.59 ஹெக்டேர் நிலமும், பாறசாலை முதல் கன்னியாகுமரி வரை 51.04 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது.
இப்பணிகள் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் இடையே உள்ள தமிழக பகுதியில் மிக மெதுவாக நடந்து வருகிறது. கேரளாவில் 38 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணியும், தமிழகத்தில் 14 சதவீத நிலம் கையகப்படுத்தும் பணியும் முடிந்துள்ளது. கேரளப் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.1312 கோடியும், தமிழகப் பகுதிக்கு ரூ.298.57 கோடியும் ரயில்வே வழங்கியது. இந்நிலையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் திட்டத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே துறை வட்டாரங்கள் கூறியதாவது: திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில் பாதையை இரட்டைப் பாதையாக அமைக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ரூ.365 கோடியுடன் கூடுதலாக ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருவனந்தபுரத்தில் இருந்து பாறசாலை வரையிலான 30 கி.மீ., துாரத்தில் 2வது ரயில் பாதை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
நேமம் முதல் பாறசாலை வரையிலான அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் நிறைவடையும். இத்துடன் நேமம் முனையப் பணியும் நடந்து வருகிறது. கேரளா-தமிழ்நாடு மாநிலங்களை இணைக்கும் இந்த ரயில்பாதைக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து நேமம் மற்றும் நேமம் டெர்மினல் வரையிலான 2வது ரயில் பாதை மார்ச் 2026க்குள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. நேமம் ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள், 2 பிட்லைன்கள், 4 ஸ்டேபிளிங் லைன்கள் போன்றவையும் கட்டப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள 13 பாலங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு கூறினார்கள்.