சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான சமையல் வகைகள் வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் சமைக்கப்படுவதில்லை. குறிப்பாக, மிகவும் விரும்பப்படும் பிரியாணிக்கு அவை ஒரு முக்கிய மூலப்பொருள். தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், பூண்டு விலையும் உயர்ந்து வருகிறது.
2020-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, பூண்டு உற்பத்தியில் தேசிய அளவில் மத்தியப் பிரதேசம் ஆண்டுக்கு 18.49 லட்சம் டன்களுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் 4.16 லட்சம் டன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழகம் ஆண்டுக்கு 7 ஆயிரத்து 150 டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது. தமிழகத்தில் 1,240 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே பூண்டு பயிரிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் பூண்டு தேவைக்கு மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. பூண்டை அங்கிருந்து கொண்டு வருவதற்கு ஆகும் செலவு காரணமாக அதன் விலை எப்போதும் உயர்வாகவே இருக்கும். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டு விலை அதிகரித்து வருகிறது. இன்று கிலோ ரூ.380 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, கோவையில் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வரும் மதர் பூண்டு நிறுவன உரிமையாளர் நந்த கோபால் கூறியதாவது:- பூண்டில் பொடி, பூனா லட்டு, லட்டு, முதல் தரம் என பல வகைகள் உள்ளன. இதில் ஏழை மக்கள் வாங்கும் பொடி பூண்டு ரூ.205-ல் இருந்து ரூ.240 ஆகவும், ஏழை, பணக்காரர்கள் வாங்கும் லட்டு ரக பூண்டு ரூ.330-ல் இருந்து ரூ.380 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த பூண்டு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் முதல் ரக பூண்டு விலை ரூ.440-ல் இருந்து ரூ.500 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இதே விலையில் பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு வருகிறது. தற்போது சீசன் முடிவடைந்து வருவதால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.