சென்னை: தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடுகள் மற்றும் முதலீட்டாளர் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை தொடர்ந்து நடத்தி, அவற்றில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
அந்த வகையில், முதல்வர் இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். மார்ச் 2022-ல், துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ரூ.6,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானன, அதே ஆண்டில், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் ரூ.1,342 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள், 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பெயினில் ரூ.3,440 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், ரூ.7,616 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானன.

இதைத் தொடர்ந்து, வணிக முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த பயணம் இந்த மாத இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மாணவர்கள் கூட்டத்தில் முதல்வர் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 10 நாட்கள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. முதலமைச்சரின் முழுமையான பயணத் திட்டம் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.