சென்னை: தமிழகத்தில் உணவுத் துறை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு, அதன்படி பணிகள் நடந்து வந்தது. இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. அதைத் தொடர்ந்து,
புதிய அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது, பெண்களுக்கான உரிமைத் திட்டத்தில் பெரும்பான்மையான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின்வாரிய முகமையால் பரிசீலிக்கப்பட்டது.
கள ஆய்வும் நடந்து வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை கோரி 2.80 லட்சம் விண்ணப்பங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இவர்களுக்கு அடுத்த மாதம் முதல் குடும்ப அட்டை வழங்கப்படும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன், தமிழகத்தில் 2021ம் ஆண்டு நிலவரப்படி 2.10 கோடியாக இருந்த குடும்ப அட்டைகள், 2022ல் 2.20 கோடியாக உயர்ந்துள்ளது.இந்த ஆண்டு நிலவரப்படி, 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 குடும்ப அட்டைகள் உள்ளன.
தற்போது புதிதாக ஸ்மார்ட் கார்டு கோரி சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. தற்போது ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய ஸ்மார்ட் கார்டு அடுத்த மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.