சென்னை: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பவானி தொகுதி அதிமுக எம்எல்ஏ. கருப்பண்ணன் தாக்கல் செய்த மனுவில், ”ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சித்து வருகிறது.
இங்கு சுங்கச்சாவடி அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைத்தால் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படும். 7 மீட்டர் அகலமுள்ள நெடுஞ்சாலையை 10 மீட்டராக விரிவுபடுத்தி சுங்கச்சாவடி அமைப்பது ஏற்புடையதல்ல. மேலும், இந்த வழித்தடத்தில் சாலைப் பணிகள் முறையாக நடைபெறாததால், அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி, “குறிப்பிட்ட பகுதியில் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றி, சுங்கச்சாவடி அமைக்கின்றனர்.இதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன,” என்றார். தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “கடந்த 2023-ம் ஆண்டு சுங்கச்சாவடி கட்டுவது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டது குறித்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த வழக்கில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டார். பின்னர், சுங்கச்சாவடி கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.