சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, சட்டசபைக்கு வந்த தமிழக ஆளுநரை, சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபைக்கு சென்ற சிறிது நேரத்தில் அங்கிருந்து காரில் புறப்பட்டார். கவர்னர் சென்ற பின், சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையை முழுமையாக தமிழில் வாசித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், தேசிய கீதத்துக்கும் மீண்டும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய கீதத்தை மதிப்பது நமது முதல் அடிப்படைக் கடமையாகும். அனைத்து சட்டப் பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் இது பாடப்படுகிறது. இன்று ஆளுநர் சட்டசபைக்கு வந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. பேரவையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டிய ஆளுநர், தேசிய கீதத்தை பாடுமாறு முதல்வர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவரிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். “அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருக்க முடியாது என்பதால், ஆளுநர் மிகுந்த வருத்தத்துடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.”