சென்னை: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும். இக்கூட்டத்தில், ஏப்., 1 முதல், செப்டம்பர், 30-ம் தேதி வரை, கிராம ஊராட்சிகளின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை படிவத்தை படித்து, ஒப்புதல் பெற வேண்டும்.
2023-24-ம் ஆண்டுக்கான கிராம பஞ்சாயத்து தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டும்.
மேலும், 15-வது மத்திய நிதி மானியக் குழு மூலம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதியை, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் தற்போது உள்ள கட்டுமான வசதிகள் மற்றும் இதர வசதிகளை கருத்தில் கொண்டு, 2025-26-ம் நிதியாண்டிற்கு தேவையான பணிகளை தொகுத்து, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும்.
கலைஞரின் கிராம வளர்ச்சித் திட்டம், கிராம வறுமை ஒழிப்புத் திட்டம், கிராம வளர்ச்சிக்கான விரிவான சுகாதாரம் மற்றும் குடிநீர்த் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி ஒருங்கிணைப்புத் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் என செயல் திட்டமாகத் தயாரிக்க வேண்டும்.
எனவே, ஊராட்சியில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் இதர வசதிகளை கருத்தில் கொண்டு இத்திட்டம் தயாரிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பட்டியலை சரிபார்த்தல், சமூக பதிவேட்டில் இடம் பெறாத மாற்றுத்திறனாளிகள் விவரங்கள் சேகரிப்பு, தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்துதல் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஜல்ஜீவன் இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் கிராம குடிநீர் கட்டமைப்பு பணிகளுக்கு 10 சதவீதம் சமூக பங்களிப்பு வழங்கி, கிராம ஊராட்சியின் குடிநீர் திட்ட பணிகளில் அனைவரின் பங்களிப்பையும் உறுதி செய்து, வீட்டில் உள்ள குடும்ப தலைவரின் ஆதார் எண் பெற்று பதிவு செய்தல்.
தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்ட பிறகு ஜல்ஜீவன் இயக்க தளத்தில் பதிவு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.