சென்னை: சென்னை தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல இடங்களில் பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. தியாகராய நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், பள்ளம் தோண்டும் போது, கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி, மிகவும் கவனமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் பூமிக்கு அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, ரசாயன திரவம் பயன்படுத்தப்பட்டதால், அப்பகுதியில் ரசாயன கசிவு ஏற்பட்டது. கசிவு எங்கு ஏற்பட்டது என்பதை கண்டறியும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள லாலா தோட்டம் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரை தளம் திடீரென பூமியில் புதைந்தது.
இதனால் வீட்டிற்குள் பள்ளம் ஏற்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது, வீட்டில் ரசாயன கசிவு இருப்பது தெரிந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற மெட்ரோ ரயில் ஊழியர்கள், கசிந்த ரசாயனத்தை அகற்றி, கான்கிரீட் கலவை பூசி, வீட்டின் தரையை சரி செய்தனர். ரசாயனத்தின் அழுத்தத்தால் வீட்டின் தளம் பூமிக்குள் மூழ்கியது தெரியவந்தது. மேலும் சேதமடைந்த வீட்டை முழுமையாக சரி செய்து தருவதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.